செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மீனவர்கள் கோஷ்டி மோதல்: 2 பேர் வெட்டிக்கொலை

Published On 2016-11-21 16:37 IST   |   Update On 2016-11-21 16:37:00 IST
கும்மிடிப்பூண்டி அருகே மீனவர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த வல்லம்பேடு மீனவ கிராமத்தில் வசித்து வருபவர் எல்லப்பன். இவர் ஊர் நிர்வாக கணக்குகளை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சித்திரத்தானுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு சித்திரத்தானின் ஆதரவாளர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கத்தி, ஈட்டி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திரண்டனர். அவர்கள் ஊருக்குள் நின்ற எதிர் தரப்பினரை திடீரென சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டினர்.

தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் உயிர் தப்ப அலறிய டித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர் தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டதால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, குனசேகரன், தேசப்பன், குமார், சிவசங்கர், சந்தோஷ், மூர்த்தி, ஆறுமணி உள்பட 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

உடனடியாக அவர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த காயம் அடைந்த அண்ணாதுரை, குணசேகரன் ஆகியோர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

மோதல் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். புதரில் வீசப்பட்ட கத்தி, ஈட்டி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான நிலை நீடிப்பதால் டி.எஸ்.பி. மாணிக்க வேல் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்திரத்தான் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே இன்று காலை அப்பகுதி பெண்கள், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக் கோரி கோவில் முன்பு ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News