செய்திகள்

பரமத்தி வேலூர் அருகே கூலி தொழிலாளியை குத்திக்கொன்ற கட்டிட மேஸ்திரி கைது

Published On 2016-11-21 17:48 IST   |   Update On 2016-11-21 17:48:00 IST
பரமத்தி வேலூர் அருகே கூலி தொழிலாளியை குத்திக்கொன்ற கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.

பரமத்தி வேலூர்:

நாமக்க்ல மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூர் அருகே உள்ள தேவராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்(வயது 25). கட்டிட மேஸ்திரி . இவரது மனைவி பிரியங்கா (22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். பிரியங்கா பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூரில் உள்ள தனது தாயார் ரேணுகாதேவி வீட்டில் வசித்து வந்தார்.

ரேணுகாதேவியின் தம்பியும், பிரியங்காவின் தாய் மாமனான பொத்தனூரை அடுத்த வெங்கரையை சேர்ந்த கூலி தொழிலாளி நந்தகுமார் (49) நேற்று இரவு அரவிந்த் வீட்டுக்கு சென்று பிரியங்காவுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த அரவிந்த் கத்தியால் நந்தகுமார் கழுத்தில் குத்தினார்.இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து பரமத்தி வேலூர் டி.எஸ்.பி சுஜாதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டிட மேஸ்திரி அரவிந்தை கைது செய்தனர்.

Similar News