செய்திகள்

தஞ்சை, திருவாரூர், நாகையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 7 ஆயிரம் பேர் கைது

Published On 2017-02-19 11:40 IST   |   Update On 2017-02-19 11:40:00 IST
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் தி.மு.க.வினர் 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்:

தமிழக சட்டசபையில் எதிர் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்..

முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

அப்போது சபாநாயகர் தனபால் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற 127 பேை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தி.மு.க.வினர் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், பட்டி மன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். தாராசுரம் பகுதியில் 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். நகர பொறுப்பாளர் செந்தில், தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேனன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவையாறு, கண்டியூர் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை டி.எஸ்.பி. அன்பழகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 40 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட 38 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, நாகை, கீழ்வேளூர் உள்ளிட்ட 19 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.இதில் 1,770 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

Similar News