மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் வியாபாரியிடம் திருடியவன் கைது
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு தினமும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நாகர் கோவில் ராமன் புதூரை சேர்ந்த வியாபாரி சுபேர் (வயது 52). மதுரை வந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று மதுரை வந்து கொள்முதல் செய்த அவர் தான் வாங்கிய பொருட்களை ஒரு பையில் வைத்து கொண்டு பஸ் ஏற மாட்டுத்தாவணி சென்றார்.
அங்கு பஸ்நிலைய இருக்கையில் அமர்ந்திருந்த சுபேர், தனது பையை அருகில் வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், அந்தப்பையை திருடிக்கொண்டு ஓடினார். இதனை கவனித்து விட் சுபேர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உஷாராகி திருடனை விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவன் போலீசில் ஓப்படைக்கப்பட்டான். அண்ணாநகர் போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவனது பெயர் வினோத் (32) என்பதும் திருச்சி காந்தி நகர் அந்தோணியார் தெருவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.