செய்திகள்

பொன்னேரி அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-04-04 12:57 IST   |   Update On 2017-04-04 12:57:00 IST
பொன்னேரி அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொன்னேரி:

பொன்னேரி அனுப்பம்பட்டு கிராமத்தில் ரயில் நிலையம் வழிபாட்டுதலம், பள்ளி, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை இருந்தது. இங்கு மது அருந்த வருபவர்கள் குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதிமக்கள் மதுக் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பொன்னேரியில் 6 கடைகள் மூடப்பட்டன.

இந்தநிலையில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள குடிகாரர்கள் மதுகுடிக்க பொன்னேரி அனுப்பம்பட்டில் உள்ள மதுக்கடைக்கு வந்தனர். இதனால் அந்த கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் டாஸ்மாக் கடையை பூட்டி சென்றார்.

இதையடுத்து மதுக்கடையை நிரந்தரமாக பூட்டும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News