செய்திகள்

ஒருநாள் முழுவதும் 2 மதுக்கடைகளை திறக்க விடாமல் பெண்கள் ஆவேசப் போராட்டம்

Published On 2017-04-04 18:18 IST   |   Update On 2017-04-04 18:18:00 IST
ஈரோடு அருகே ஒரு நாள் முழுவதும் 2 மதுக்கடைகளை திறக்க விடாமல் பெண்கள் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகள் அகற்றப்பட்டு மாற்று இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் மற்ற கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் நெடுஞ்சாலையோரம் உள்ள கடைகளில் மது குடித்து வந்த குடிமகன்கள் தற்போது அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மொய்த்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த கடைகளில் ‘‘குடி’’ மகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள 3 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இதனால் சரக்கு கிடைக்காமல் தவித்துப் போன குடிமகன்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள உப்புக்காரபள்ளம், பி.மேட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுகடைக்கு அலை மோதிய வண்ணம் உள்ளனர்.

இதனால் அந்த கடைகளில் நீண்ட வரிசையில் குடிமகன்கள் காத்திருந்து மதுபானம் வாங்குகிறார்கள். மேலும் அவர்களிடையே சரக்கு வாங்க கடும் போட்டி ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

மேலும் சில குடிமகன்கள் குடித்து விட்டு போதையில் அப்பகுதியில் நடமாடுகிறார்கள். அங்கு நடந்து செல்லும் பெண்களிடம் பல்லை காட்டி கிண்டல் செய்வதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் உப்புக்காரபள்ளம், பி.மேட்டுப்பாளையம் டாஸ்மாக் மதுகடை முன் குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கடைகளை திறக்க விடமாட்டோம் என கடைகள் முன் உட்கார்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த ஊழியர்கள் பெண்கள் போராட்டத்தையொட்டி அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் டாஸ்மாக் மடண்டல மேலாளர் ஜெயச் சந்திரன், மாவட்ட மேலாளர் யாகூப் மற்றும் கவுந்தப்பாடி போலீசார் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள் ‘‘இந்த மதுக்கடைகளால் எங்களுக்கு பல தொல்லைகள் ஏற்படுகிறது. ரோட்டில் கூட நடமாட முடியவில்லை. இந்த கடைகளை கண்டிப்பாக திறக்க விடமாட்டோம்’’ என்று கூறினர்.

போராட்டம் நீடித்துக் கொண்டே போனதால் பெண்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதையொட்டி அந்த 2 கடைகளும் மூடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். அதன் பிறகுதான் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த கடைகளுக்கு சரக்கு வாங்க வந்த குடிமகன்கள் மதுக்கடை முன் பெண்கள் ஆவேசத்துடன் போராடி கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்து ‘ஜகா’ வாங்கினர்.

சில குடிமகன்கள் ‘‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...’’ என்று கூறி விட்டு சரக்கு வாங்க முடியாமல் வேறு கடையை நோக்கி புறப்பட்டனர்.

Similar News