செய்திகள்
திருக்காட்டுப்பள்ளியில் இளம்பெண்ணை கட்டையால் தாக்கி 5 பவுன் நகை பறிப்பு
திருக்காட்டுப்பள்ளியில் பெண்ணை கட்டையால் தாக்கி நகை பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதலூர்:
தஞ்சை கரந்தை ஜைனமூப்ப தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி சோபனா (25). இவர் தனது குழந்தைகள் கனிஸ்கா, மேகவர்சனுடன் கோடை விடுமுறைக்காக திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் வீட்டின் பின் பக்க கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் எழுந்து வந்த சோபனா கதவை திறந்து பார்த்தார்.
அப்போது அங்கு நின்ற மர்ம நபர் உருட்டுக்கட்டையால் சோபனாவை தலையில் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார்.
மர்ம ஆசாமி தாக்கியதில் காயம் அடைந்த சோபனா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப் பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.