செய்திகள்

குடிப்பழக்கத்தை கண்டித்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து இறந்த வாலிபர்

Published On 2017-05-31 16:39 IST   |   Update On 2017-05-31 16:39:00 IST
குடிப்பழக்கத்தை மனைவியும், பெற்றோரும் கண்டித்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு ராசம்பாளையம் அருகில் உள்ள வில்லரசம் பட்டியை சேர்ந்தவர் ஜோபட் கிளிண்டன் (வயது 23). இவர் சொந்தமாக 2 கார்கள் வைத்துள்ளார். அந்த கார்களை ஒரு கால் டாக்சி நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

நேற்று காலை இவரது கார் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே ரோட்டோரமாக நின்றது. அந்த வழியாக ஜோபட் கிளிண்டனின் உறவினர் ஒருவர் வந்தார்.

அவர் ஜோபட் கிளிண்டனின் காரை கண்டதும் அருகில் சென்று பார்த்தார். அப்போது காரில் டிரைவரின் இருக்கையில் ஜோபட் கிளிண்டன் மயங்கியபடி கிடந்தார்.

இதனால் அங்கு பலர் கூடினர். மக்கள் கூடியதால் பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காருக்குள் மயங்கி கிடந்து ஜோபட் கிளிண்டனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜோபட் கிளிண்டன் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். ஜோபட் கிளிண்டன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து இறந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

ஜோபட் கிளிண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டாம். இதனால் தொழிலை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். எனவே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி அவரது மனைவி ரேவதியும், பெற்றோரும் கண்டித்தனர்.

இதனால் மனம் உடைந்து தான் ஜோபட் கிளிண்டன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த ஜோபட் கிளிண்டனுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News