செய்திகள்

திருப்போரூர் அருகே சிவன் கோவிலில் மரகதலிங்கம் கொள்ளை: ரூ.2 கோடி மதிப்புடையது

Published On 2017-06-24 12:55 IST   |   Update On 2017-06-24 12:55:00 IST
திருப்போரூர் அருகே சிவன் கோவிலில் உள்ள மரகதலிங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளைபோன அந்த மரகதலிங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
திருப்போரூர்:

திருப்போரூர் அருகே இள்ளலூர் கிராமத்தில் இருந்து ஈச்சங்காடு செல்லும் சாலையில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது.

இன்று காலை 6 மணியளவில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட கிராம மக்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நேற்று இரவு பெய்த மழையை சாதகமாக பயன்படுத்தி மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமிசிலையின் மேல் உள்ள 1 அடி உயரமுள்ள மரகதலிங்கத்தை மட்டும் திரவம் ஊற்றி பீடத்தை விட்டுவிட்டு லிங்கத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன அந்த மரகதலிங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.



கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்களது கைரேகை படாமல் இருக்க கோயில் பூட்டை உடைத்து விட்டு தாழ்பாளில் எண்ணெய் தடவியுள்ளனர். மேலும் கோயிலுக்குள் இருந்த 2 ஐம்பொன்சிலைகளை விட்டு அந்த சிறிய மரகதலிங்கத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



காஞ்சீபுரத்திலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவராக இருந்த இந்த ஒரு அடி மரகத சிலை அகற்றப்பட்டு புதிதாக ஒருசிலை பிரதிஷ்டி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அகற்றப்பட்ட சிலை ஒருமூலையில் மற்ற பொருட்களுடன் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது கும்பாபிஷேகத்திற்கு வந்த சாமியார் ஒருவர் இந்த சிலை பல கோடி மதிப்புள்ளது. அதை பாதுகாப்பில்லாமல் ஒரு மூலையில் போட்டு வைத்துள்ளீர்கள் என கூறியதையடுத்து தான் அந்த சிலை மரகதலிங்கம் எனவும் பல கோடி மதிப்புள்ளது என தெரியவந்தது. இதையடுத்து மூலவர் பகுதியில் ஒரு பக்கத்தில் அந்த சிலையை வைத்து வழிபாடு செய்து வந்து உள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இதேபோல் இரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கோவில் கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கோயில் அருகில் வசித்து வரும் பிரபாகர் பார்த்துள்ளார்.

இதனால் அவரை 4 பேரும் தாக்க முயன்றுள்ளனர். அவரும் செங்கற்களை அந்த 4 பேர் மீது வீசி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற ஒரு மோட்டார்சைக்கிள் திருப்போரூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மர்ம கும்பல் மரகத லிங்க சிலையை கொள்ளையடிக்க பல நாட்கள் திட்டமிட்டு வந்துள்ளது தெரிய வந்தது.

Similar News