செய்திகள்
சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெறுவதை படத்தில் காணலாம்

சி.பா.ஆதித்தனார் சிலையை அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்

Published On 2017-09-14 10:21 IST   |   Update On 2017-09-14 10:21:00 IST
சென்னை எழும்பூரில் கடந்த மே மாதம் அகற்றப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.
சென்னை:

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில், 1987-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’ சிலை திறந்து வைக்கப்பட்டது. ஆதித்தனார் சிலையை நிறுவுவதற்கான அந்த இடத்தை எம்.ஜி.ஆரே தேர்ந்து எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் ‘சி.பா.ஆதித்தனாரின்’ பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மே மாதம் 24-ந் தேதி சி.பா.ஆதித்தனாரின் 36-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் அந்த இடத்தில் இருந்த 3 போக்குவரத்து பூங்காக்களை ஒரே பூங்காவாக மாற்றி அமைப்பதற்காக, சி.பா.ஆதித்தனாரின் சிலையை ‘தினத்தந்தி’ நிர்வாகத்தின் ஒப்புதலோடு மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அந்த சிலை ‘தினத்தந்தி’ நிர்வாகத்தின் பொறுப்பில் பாதுகாப்பாக உள்ளது.

பூங்கா சீரமைப்பிற்கான திட்டமிடுதலில் போக்குவரத்து போலீசாருக்கும், மாநகராட்சியினருக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தால் பூங்கா சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களாகவே தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், வருகிற 27-ந் தேதி ‘சி.பா.ஆதித்தனாரின்’ 113-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், அதற்கு முன் அவரது சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிலை இருந்த இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று காலையிலேயே மாநகராட்சி சார்பில் பூங்கா பராமரிப்பு பணி தொடங்கியது. எனினும், போராட்டத்துக்கு தயாராக வந்த நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், சிலம்பு எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கே.சுந்தரேசன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் செய்திருந்தார்.

ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பே, சிலை அமைப்பதற்கான பணிகள் சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்டிருந்தாலும், சிலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து தொலைபேசியில் அவர்களுடன் பேசிய மாநகராட்சி அதிகாரிகள் 5 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெற்றி முழக்கமிட்டு கலைந்து சென்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் எம்.விஜயலட்சுமியை நேற்று சென்னை நாடார் சங்கத்தின் தலைவர் பி.கரண்சிங் நாடார், செயலாளர் டி.விஜயகுமார் நாடார், பொருளாளர் மகேஷ் நாடார் ஆகியோர் சந்தித்து சி.பா.ஆதித்தனார் பிறந்ததினம் 27-ந் தேதி வர இருப்பதால், உடனே அதே இடத்தில் மீண்டும் புதுபொலிவுடன் சிலையை நிறுவிட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துரமேஷ் நாடார், தமிழ் சமுதாய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலையை உடனடியாக நிறுவக்கோரி முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன், அகில இந்திய மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொது செயலாளர் மு.இனியவன் ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலையை உடனடியாக நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Similar News