செய்திகள்
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

19 எம்.எல்.ஏ.க்களை மிரட்டி பேரம் பேசுவதாக கூறுவதில் உண்மையில்லை: வைத்திலிங்கம் எம்.பி.

Published On 2017-09-14 14:59 IST   |   Update On 2017-09-14 14:59:00 IST
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் அரசுக்கு ஆதரவாக வரக்கோரி அவர்களிடம் பேரம் பேசி மிரட்டுவதாக கூறுப்படுவது உண்மைக்கு புறம்பானது என வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
திருச்சி:

சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பு குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி. தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்கு திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி இந்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசைப்படி அடுத்துவரும் நூறாண்டுகளுக்கும் நீடிக்கும். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரையும் அரசுக்கு ஆதரவாக வரக்கோரி அவர்களிடம் பேரம் பேசி மிரட்டுவதாக கூறுப்படுவது உண்மைக்கு புறம்பானது. இது ஜனநாயக நாடு, யாரும் யாரையும் மிரட்டக் கூடாது, மிரட்டவும் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் வைத்திலிங்கம் தஞ்சை புறப்பட்டு சென்றார்.

இதையொட்டி திருச்சி விமான நிலையத்தில் போலீஸ் உதவி கமி‌ஷனர் அருள்அமரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News