செய்திகள்

திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து மாணவ - மாணவிகள் படுகாயம்

Published On 2017-09-14 19:36 IST   |   Update On 2017-09-14 19:36:00 IST
திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
வடமதுரை:

திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே உள்ள தனியார் நர்சரி பள்ளிக்கு அப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குழந்தைகளை ஏற்றிச் செல்ல பள்ளி வேன் உள்ளது.

இன்று காலை வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. 30 பேர் உள்ளே இருந்தனர். கிணத்துப்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் கிணத்துப்பட்டியைச் சேர்ந்த மாணவர் கள் மூக்கன் (வயது 5), கிஷோர் (7), ஹரீஷ் (5), நிவேதா (6), பிரதியுஷா (6) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் உள்ள பள்ளி வேன்களை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுத்ததால் விபத்து குறைந்தது.

ஆனால் தற்போது மீண்டும் விபத்துகள் ஏற்பட தொடங்கியுள்ளது. எனவே அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். மேலும் ஓட்டுனர்களின் உரிமங்களையும் சரிபார்க்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News