செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான டெண்டர் தள்ளிவைப்பு

Published On 2018-02-06 15:40 IST   |   Update On 2018-02-06 15:40:00 IST
ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டுவதற்கான டெண்டர் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அட்வகேட் ஜெனரல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அம்பத்தூரை சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்தார்.

‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக சென்னை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், கடந்த ஜனவரி 18-ந் தேதி ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘பிப்ரவரி 7-ந் தேதிக்குள் அனைவரும் ஒப்பந்த நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்ய வேண்டும். அன்று மாலை 4 மணிக்கு அந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும்’.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ஆனால் தமிழ்நாடு டெண்டர் சட்ட விதி 20-ன் படி, ரூ.2 கோடிக்கு மேல் டெண்டர் விட்டால், ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்ய, அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் ஒப்பந்தப் பணி தொடர்பான அறிவிப்பில், இந்த கால அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் துரைசாமி, வக்கீல் இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்த அறிவிப்பில், பிப்ரவரி 7-ந்தேதி ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கடைசி நாள் வருகிற 21ந்தேதி என்று அறிவித்துள்ளோம். நாளை நடைபெற இருந்த டெண்டரை தள்ளிவைத்து விட்டோம்’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, ‘ஏற்கனவே ஜெயலலிதாவின் நினைவிடம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, இந்த வழக்கையும், அந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க பரிந்துரை செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #tamilnews

Similar News