விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் மறியல்- பொன்முடி உள்பட 1500 பேர் கைது
விழுப்புரம்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்திலும் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகர தி.மு.க.சார்பில் நகர செயலாளர் சர்க்கரை தலைமையில் புதுவை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பின்னர் அங்கு சாலை மறியல் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகர சபை தலைவர் துரைராஜ், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் டாக்டர்.முத்தையன், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, நகர நிர்வாகி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தகவல் அறிந்து வந்த விழுப்புரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
வானூர் அருகே திருச் சிற்றம்பலம் கூட்ரோடு பஸ்நிலையம் முன்பு விழுப்புரம் மாவட்ட தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் நடந்தது.
இதில் விக்கிர வாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி, மாவட்ட விவசாய அணி தலைவர் பாஸ்கர், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை அமைப்பாளர் பொன்னி.வளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி, ராதாமணி எம்.எல்.ஏ. உள்பட 150 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திருவெண்ணை நல்லூர் அருகே அரசூர் கூட்ரோட்டில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணைநல்லூர் தி.மு.க.கிழக்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பஸ்நிலையம் முன்பு இன்று காலை திரண்டனர். அங்கு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் மாவட்டத் தில் விக்கிரவாண்டி, வளவனூர், காணை ஒன்றியம், திருநாவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.