செய்திகள்
பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்

கோவில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி- பேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2018-07-03 10:04 IST   |   Update On 2018-07-03 10:04:00 IST
நன்னிலம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அதம்பார் கிராமத்தில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து ஓராண்டு நிறைவு நாள் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுண்டல், புளிசாதம், தயிர் சாதம் உள்பட பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென்று அந்த கிராமத்தை சேர்ந்த 70 பேருக்கு திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிலர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

ஆனாலும் அவர்களில் 33 பேருக்கு மட்டும் வாந்தி-பேதி மேலும் தொடர்ந்தது.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி(வயது 33), மாரிமுத்து(18), நிஷா(17), அபிராமி(19), மீனாட்சி(31), சிவராமன்(15), தமிழ்மாது(13), சஞ்சை(9), சத்யா(10), ஆகாஷ்(10) உள்பட 33 பேர் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் பரஞ்ஜோதி, சுகாதார இணை இயக்குநர் உமா, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். மேலும் அதம்பார் கிராமத்தில் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து வாந்தி-பேதிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கும்பாபிஷேக நிறைவு விழாவில் வழங்கப்பட்ட சுண்டல், புளிசாதம், தயிர் சாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டதாக தெரிய வந்தது. மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. #tamilnews
Tags:    

Similar News