செய்திகள்

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை அடைப்பு: 95 கோடி ரூபாய் வருமானம் குறைவு

Published On 2019-01-20 13:21 IST   |   Update On 2019-01-20 14:37:00 IST
மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்ட சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. வருமானம் 95 கோடி ரூபாய் குறைந்துள்ளது. #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் கடந்த 30-ந்தேதி மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 14-ந்தேதி பிரசித்திப் பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெற்றது.

அப்போது பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்டு திருவாபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சியும் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது.

நேற்றிரவு 9.50 மணியுடன் சுவாமி அய்யப்பனை பக்தர்கள் தரிசனம் செய்வது நிறைவு பெற்றது. இன்று காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சுவாமி தரிசனத்தை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் சாவியும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்களும் பந்தளம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக குறைந்து விட்டது.

இதன் காரணமாக சபரிமலை கோவில் வருமானமும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலை கோவில் வருமானமாக ரூ.263 கோடியே 78 லட்சம் கிடைத்திருந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி (நேற்று) வரை ரூ.168 கோடியே 12 லட்சம் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.95 கோடியே 66 லட்சம் வருமானம் குறைந்துள்ளது.

இதற்கிடையில் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய அய்யப்ப பக்தர்கள் உள்பட பலர் மீது கேரள போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கேரள போலீசார் தாக்கல் செய்தனர். அதில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை 2012 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மொத்தத்தில் 67 ஆயிரத்து 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 561 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்ரி கண்டம் மைதானத்தில் இன்று அய்யப்பப்பக்தர்கள் சங்கமம் நடக்கிறது. கேரளாவைச் சேர்ந்த மாதா அமிர்தானந்தமயி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

திருவனந்தபுரம், கோட்டயம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யப்பப் பக்தர்கள் நாமஜெப கோ‌ஷத்துடன் ஊர்வலமாக வந்து இதில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா பகுதிகளில் இருந்தும் அய்யப்பப் பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். சபரிமலையை காப்போம், சபரிமலையில் ஆச்சாரங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News