செய்திகள்
கொலை செய்யப்பட்ட ஏட்டு ஜெகதீஷ் துரை

மணல் கடத்தலை தடுத்த போலீஸ் ஏட்டு கொலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2019-02-19 16:29 IST   |   Update On 2019-02-19 16:29:00 IST
நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஏட்டு கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்டது வடக்கு விஜய நாராயணம். இங்குள்ள போலீஸ் நிலையத்தில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீஷ்துரை (வயது 33).

இவர் கடந்த ஆண்டு மே மாதம் 6-ந்தேதி இரவு ரோந்து பணியை முடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கக்கன்நகர் விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே ஒரு டிராக்டர் மணல் திருடி கொண்டு வேகமாக சென்றது. உடனே ஜெகதீஷ் துரை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணல் திருட்டு கும்பல் ஜெகதீஷ் துரை மீது டிராக்டரை கொண்டு மோதினார்கள். பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இதையடுத்து விபத்து நடந்தது போன்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி விஜய நாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், கிருஷ்ணன், முருகப்பெருமாள், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட முருகன், கிருஷ்ணன், மணிக்குமார், ராஜாரவி, அமிதாப்பச்சன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். #tamilnews
Tags:    

Similar News