செய்திகள்
நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட பீரோ

நகைக்கடை மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-07-04 11:25 IST   |   Update On 2019-07-04 11:25:00 IST
சேலம் அரிசிபாளையத்தில் நகைக்கடை மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அரிசிபாளையம் சுலுக்கு பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 33). இவர் சேலத்தில் உள்ள ஒரு நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யலட்சுமி (27). இவர்களுக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது. தற்போது திவ்யலட்சுமி 2-வதாக நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் திவ்ய லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு சேர்ப்பதற்காக ரமேஷ் பீரோவில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அவசரத்தில் சாவியை அதிலேயே விட்டு சென்றார். பின்பு வீட்டை பூட்டிவிட்டு மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

ரமேஷ் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்து போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தது.

பீரோவில் இருந்த 20 பவுன் தங்கநகை, 2 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.

இது குறித்து ரமேஷ் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் அங்கு வந்தது. அது சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ரமேஷ் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற நேரத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.

இதனால் அதே பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை தேடி பிடிக்கும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News