ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேசுவரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளி மண்டல சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கன மழையால் நீர்நிலைகளுக்கு கணிசமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த மழையால் போக்குவரத்து பணி மனையின் சுவர் இடிந்து விழுந்து 10 அரசு பஸ்கள் சேதமடைந்தன. சில இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் வீரராகவ ராவ் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கிட உத்தரவிட்டார்.
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.
வளிமண்டல சுழற்சி காரணமாக திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்தது.
அதன்படி ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் வளத்துறை அனுமதி டோக்கனை வழங்கவில்லை.
மீன்பிடி தடையால் ராமேசுவரம், பாம்பன் துறை முகங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.