செய்திகள்
கொலை

சேடப்பட்டி அருகே உலக்கையால் தாக்கி தாயை கொன்ற மகன்

Published On 2019-10-23 15:39 IST   |   Update On 2019-10-23 15:39:00 IST
சேடப்பட்டி அருகே பணம் தராததால் உலக்கையால் தாக்கி தாயை கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் கொல்லமுத்து. இவரது மனைவி ஜோதியம்மாள் (வயது 60).

இவர்களது மகன் முத்துப்பாண்டி (32), தச்சு வேலை செய்து வந்தார். இவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தாராம். இதனால் பணப்பிரச்சினையில் தவித்து வந்தார்.

இன்று காலை தாயார் ஜோதியம்மாளை சந்தித்து முத்துப்பாண்டி பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி, வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஜோதியம்மாள் அலறியபடி கீழே சாய்ந்தார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வர, முத்துப்பாண்டி தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியம்மாளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சேடப்பட்டி போலீசார் விரைந்து சென்று ஜோதியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய முத்துப்பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News