திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள் உள்பட 705 தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி
திருவள்ளூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான அரசிஆலைகள், எண்ணை தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள், எண்ணை தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட 705 அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது-
திருவள்ளூர் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் 705 தொழிற்சாலைகளுக்கும், 24 அரிசி ஆலை, 32 எண்ணை ஆலைக்கும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்தத் தொழிற்சாலைகளில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான பணியாட்களை தவிர கூடுதலாக யாரேனும் பணியில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இல்லை என்றால் 200 ரூபாய் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பரிசோதனைக்கு 900 ரேபிட் கிட் வந்துள்ளது.இது வரை 145 பேருக்கு சோதனை செய்ததில் ஒரு வருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு மூச்சுத் திணறல் காய்ச்சல், தலை வலி ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளலாம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணிபுரியும், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், மற்றும் காவலர்கள் ஆகியோருக்கு முதல்கட்டமாக பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.