செய்திகள்
குழந்தை மீட்பு

மதுரையில் 9 மாத ஆண் குழந்தை விற்பனையா?- பெற்றோரிடம் விசாரணை

Published On 2020-06-08 19:09 IST   |   Update On 2020-06-08 19:09:00 IST
மதுரையில் 9 மாத ஆண் குழந்தை விற்கப்பட்டதா என்பது குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை செல்லூரை சேர்ந்தவர் லாரி டிரைவர் ராபர்ட். இவரது 2-வது மனைவி மேரிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில் வெளிநாட்டில் பணியாற்றி வரும் மதுரை செல்லூர் போஸ் வீதியை சேர்ந்த ஷாஜகான்-நாகூர் அம்மாள் தம்பதிக்கு திருமணமாகி கடந்த 25 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இதற்கிடையில் ராபர்ட்மேரி தம்பதி தங்களின் 2-வது பிறந்த ஆண் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படும் விபரம் நாகூர் அம்மாளுக்கு தெரியவந்துள்ளது.

இதற்காக இடைத்தரகர் ஒருவர் மூலம் குழந்தையை வாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக பெரிய அளவில் தொகை ஒன்று கை மாறியதாக கூறப்படும் நிலையில், பிரச்சினை வராமல் இருக்க வறுமையில் குழந்தையை நாகூர் அம்மாளிடம் ஒப்படைப்பதாக இருதரப்பும் வழக்கறிஞர் ஒருவர் மூலம் 20 ரூபாய் பத்திரத்தில் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளனர்.

அரசு விதிகளுக்கு முரணாக நடந்த பரிவர்த்தனையின் அடிப்படை யில் குழந்தை கைமாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு ரகசிய புகார் வந்ததின் அடிப்படையில் செல்லூர் போலீசார் உதவியோடு அங்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தியதில் குழந்தை கை மாறியதை உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து நாகூர் அம்மாள், ராபர்ட், மேரி ஆகியோரிடம் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராபர் மேரி தம்பதியரின் 3 வயது மகள் மற்றும் விற்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை மீட்டு கருமாத்தூரில் உள்ள காப்பாகத்தில் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், குழந்தையை கை மாற்ற உதவிய இடைத்தரகர் யார்? குழந்தைக்காக கை மாறிய தொகை எவ்வளவு என்பது குறித்த கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாத நிலையில் சம்பந்தப்பட்ட மூவரிடமும் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News