செய்திகள்
கோப்புபடம்

தொழிலாளி வீட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம் - பொதுமக்கள் பீதி

Published On 2020-08-13 15:21 IST   |   Update On 2020-08-13 15:21:00 IST
கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை ஊராட்சிக்குட்பட்ட நெல்லிக்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று விவசாயி உன்னிகிருஷ்ணன் என்பவரது வீட்டை நள்ளிரவில் சேதப்படுத்தியது.

இதனால் உயிருக்கு பயந்து அவரது குடும்பத்தினர் வேறு வழியாக தப்பி சென்றனர். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் அதன் உடன் இருந்த கொட்டகையை முழுமையாக சேதப்படுத்திய இருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.

இதுகுறித்து முதுமலை வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அடிக்கடி ஊருக்குள் வந்து காட்டு யானை விவசாய பயிர்கள் வீடுகளை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.

இதேபோல் கூடலூர் அருகே புளியம்பாறை கத்தரி தோடு பகுதியில் நேற்று அதிகாலையில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பின்னர் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இந்த சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணியம் என்பவரின் வீட்டை காட்டு யானை உடைத்தது. இதனால் அச்சம் அடைந்த பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு காட்டு யானை வனத்துக்குள் சென்றது. காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தேவாலா வனத்துறையினர் நேரில் சேதமடைந்த வீட்டையும், அப்பகுதியில் காட்டு யானையால் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டனர். இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News