செய்திகள்
தற்கொலை முயற்சி

போக்சோ சட்டத்தில் கைதானவரின் பெற்றோர் மிரட்டல்: விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி

Published On 2020-08-13 19:49 IST   |   Update On 2020-08-13 19:49:00 IST
போக்சோ சட்டத்தில் கைதானவரின் பெற்றோர் மிரட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேராவூரணி:

பேராவூரணி அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த மாதம் 31-ந் தேதி மாலை தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 14 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இதைத்தொடர்ந்து பேராவூரணி போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். சக்திவேலின் பெற்றோர் ராஜா, வள்ளிக்கண்ணு ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டி, புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிறுவனை, சக்திவேல் தனது வீட்டுக்கு அழைத்து சென்றதை பார்த்ததாக போலீசாரிடம் சாட்சி அளித்த பக்கத்து வீட்டு பெண் ஜெயசக்தி (வயது 27) என்பவரை சக்திவேலின் பெற்றோர் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் ஜெயசக்தி மனமுடைந்து பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயசக்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜெயசக்தியின் கணவர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசார் விசாரணை நடத்தி, ராஜா மற்றும் வள்ளிக்கண்ணுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News