செய்திகள்
தமிழக சட்டசபை

வரதட்சணை கொடுமைக்கு இனி 10 ஆண்டு ஜெயில்- சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல்

Published On 2021-02-05 15:37 IST   |   Update On 2021-02-05 15:37:00 IST
சட்டப்பிரிவு 304பி, வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்க வகை செய்கிறது. இது 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்டத்தை அறிமுகம் செய்தார்.

இதன்படி சட்டப்பிரிவு 304பி வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது 7 ஆண்டு ஜெயில் தண்டனை உள்ளது. இது 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

பிரிவு 354 பி-ன் படி குற்ற நோக்கத்துடன் பெண்கள் ஆடைகளை களைதல் குற்றத்திற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு தண்டனை உள்ளது. இது 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

பிரிவு 354டி-ன்படி தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை தொடர்ந்தால், 2-ம் முறையும் அதே குற்றத்தை செய்தால் தற்போது 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை உள்ளது. இதை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக உயர்த்த இந்த சட்டம் வகை செய்கிறது.

பிரிவு 372-ன்படி பாலியல் தொழிலுக்காக 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, பெண்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373-ன்படி பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட பெண்களை விலைக்கு வாங்குதல் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக தற்போது 10 ஆண்டு வரை சிறை தண்டனை உள்ளது. இதில் குறைந்தபட்சம் 7 ஆண்டு தண்டனையில் இருந்து அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்க புதிய சட்டத்தின்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மத்திய அரசிடம் இந்த சட்டங்கள் தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே அளித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது.

எனவே இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராஜாமுத்தையா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகியவையும் அரசு கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டன.

இவை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நல பிரிவிடம் ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இதேபோல அமைச்சர் கே.சி.வீரமணி, சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தில் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். சர்க்கரை ஆலை சட்டத்தின் கீழ் கரும்பின் மீது கூடுதல் வரி வசூலிக்கும் முறை இருந்தது. அதை நீக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

Similar News