செய்திகள்
திருப்பூரில் மதுபாட்டில்கள் கடத்திய போலீஸ்காரர்கள் கைது
காரை சோதனை செய்த போது 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும்,பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரின் அடையாள அட்டையும் இருந்தது.
பல்லடம்:
கொரோனா பரவல் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.இதனால் மது பிரியர்கள் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று மது வாங்கி வருகின்றனர். சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இதையடுத்து மாவட்ட எல்லை பகுதிகளில் எஸ்.பி.சசாங் சாய் உத்தரவின் படி போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவுபல்லடம் தாராபுரம் சாலை கள்ளிப்பாளையம் சோதனை சாவடியில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. அதிவேகமாக சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.அங்கு வந்த காவல் துறையினர் காரை சோதனை செய்தபோது 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும்,பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரின் அடையாள அட்டையும் இருந்தது.
அதனைத்தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரித்த போது அவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் முத்துசுருளி, மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் துரைமுருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2பேர் மீதும் விபத்து ஏற்படுத்துதல், மதுபாட்டில்கள் கடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி காரில் திருப்பூருக்கு கடத்தி கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. இதில் போலீஸ்காரர் துரைராஜ் போலீஸ் சீருடை அணிந்தவாறே கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
மது கடத்தலை தடுக்க வேண்டிய போலீசாரே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது உயர் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.