செய்திகள்
போச்சம்பள்ளி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டியை சேர்ந்தவர் அலி அகமத். இவருடைய மனைவி தில்ஷாத் பேகம் (வயது 26). இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20-ந் தேதி இரவு இவர்களுடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு பையில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
இந்த திருட்டு குறித்து தில்ஷாத் பேகம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தில்ஷாத் பேகம் வீடு உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜூன் (26), மகேந்திரன் (26) என்பதும், வங்கி காசாளர் தில்ஷாத் பேகம் வீட்டில்திருடியதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் மல்லிகார்ஜூன், மகேந்திரன் ஆகிய 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.