உள்ளூர் செய்திகள்
திருட முயன்றதால் அடித்து கொலை: வாலிபரின் உடலை ஆற்றில் வீசி விட்டு தப்பியதாக நாடகமாடிய கும்பல் கைது
பேரூர் அருகே வாலிபரின் உடலை ஆற்றில் வீசி விட்டு தப்பியதாக நாடகமாடிய 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பேரூர்:
கோவை ஆலாந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்(வயது55). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்திற்குள் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் புகுந்து திருட முயன்றார். இதனை தோட்டத்தில் தங்கியிருந்த விஸ்வநாதன்(30), சம்பத்குமார்(30) ஆகியோர் பார்த்து, வாலிபரை விரட்டி சென்று பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால், அவரை காலையில் அழைத்து செல்வதாக கூறிவிட்டு போலீசார் அங்கிருந்து சென்றனர். மறுநாள் வாலிபரை தேடி சென்றபோது அங்கு அவர் இல்லை. இதுகுறித்து தோட்டத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது தப்பியோடி விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பூலுவம்பட்டி- தென்னமநல்லூர் செல்லும் ரோட்டில் நொய்யல் ஆற்றின் ஓரம் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அது தோட்டத்தில் திருட முயன்ற வாலிபர் என்பது தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அவரது தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டதும், கொலையை மறைக்க சடலத்தை ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் திருட முயற்சித்ததாக கூறப்படும் காளியப்பன் என்பவர் தோட்டத்திற்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள், தோட்டத்தின் அருகே வசிக்க கூடியவர்களுடன் சேர்ந்து வாலிபரை திருடன் என நினைத்து அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் வழக்கில் தொடர்புடைய பூலுவப்படி சித்திரைசாவடியை சேர்ந்த விஸ்வநாதன்(30), காளியப்பன்(56), சம்பத்குமார்(41), துரைசாமி(50), கார்த்திக்(31), கணேசன்(37), ஜெகநாதன், பொன்னுசாமி(52), ஜோதிராஜ்(50), சரவணகுமார்(44) ஆகிய 10 பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் கூட்டு சதி, தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இறந்த வாலிபர் சம்பவத்தன்று இரவு எங்கள் தோட்டத்திற்குள் புகுந்து திருட முயன்றார். இதனை பார்த்த நாங்கள் சத்தம் போட்டோம். எங்களது சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்களும் ஓடி வந்தனர். அனைவரும் சேர்ந்து திருட வந்த வாலிபரை பிடித்து அவரிடம் விசாரித்து கொண்டே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தோம். போலீசார் வந்து விசாரித்து விட்டு, காலையில் அழைத்து செல்வதாக கூறினர்.
நாங்கள் தொடர்ந்து அந்த நபர் யார் என விசாரித்தோம். அப்போது அவர் எங்களை கீழே தள்ளிவிட்டு தப்பியோட பார்த்தார். அவரை விரட்டி சென்று பிடித்து மரத்தில் கட்டி வைத்து கட்டையால் உடல் மற்றும் தலையில் தாக்கினோம்.
இதில் பலத்த காயம் அடைந்த, மயங்கி விழுந்தார். நாங்கள் எழுப்பி பார்த்து அவரது உடலில் எந்த வித அசைவும் இல்லை. இதனால் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தோம்.
நாங்கள் அடித்ததால் தான் அவர் இறந்தது தெரியவந்ததால் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்பதால், அதனை மறைக்க முடிவு செய்தோம். மேலும் போலீசார் கேட்டால் அவர் தப்பியோடி விட்டதாக நாடகமாடி விடலாம் எனவும் நினைத்தோம். அதன்படியே வாலிபரின் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று நொய்யல் ஆற்றில் வீசினோம். மறுநாள் போலீசார் வந்து விசாரித்தபோது தப்பியோடி விட்டதாக தெரிவித்தோம். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து போலீசார் கைதான 10 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.