உள்ளூர் செய்திகள்
பள்ளிகள் தரம் உயர்வு - பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட வேண்டிய உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் கருத்துருக்கள் திரட்டும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளை கண்டறிந்து தேவைக்கேற்ப தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வரும், 2022-23ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 165 அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகள் மாவட்டம்தோறும் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட வேண்டிய உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் கருத்துருக்கள் திரட்டும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்படும் பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.