உள்ளூர் செய்திகள்
தை அமாவாசை அன்று பக்தர்கள் புனித நீராடும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம்.

கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி கடலில் புனித நீராட அனுமதிக்க வேண்டும்-பக்தர்கள் கோரிக்கை

Published On 2022-01-20 13:19 IST   |   Update On 2022-01-20 13:19:00 IST
கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி கட்டுப்பாடுகளுடன் கடலில் புனித நீராட அனுமதி வழங்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கன்னியாகுமரி:

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அப்போது கடலில் நீராடி விட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்வார்கள்.

அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வார்கள்.

பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தை அமாவாசை விழா இந்த ஆண்டு வருகிற 31-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பிரச்சினையால்  சுற்றுலா தலங்களில் உள்ள கடற் கரைகளுக்கு செல்ல இதுவரை அனுமதி வழங்கப்பட வில்லை.

மேலும் கடலில் குளிப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு தை அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேநேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி கன்னியாகுமரி கடலில் தை அமாவாசை அன்று பக்தர்கள் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஏனெனில் இந்துக்கள் வருடத்துக்கு ஒருமுறை தை அமாவாசை அன்று புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கவில்லை என்றால் பித்ரு தோஷம் ஏற்படும் என்ற ஒரு ஐதீகம் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு தை அமாவாசை அன்று அதிகாலையில் இருந்து மாலை வரை சுழற்சி முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News