உள்ளூர் செய்திகள்
கொள்முதல் நிலைய முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
மதுக்கூர் அருகே உள்ள கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சிலரின் நெல்லை கொள்முதல் செய்து விட்டு பல விவசாயிகளின் நெல்லை பல்வேறு காரணங்களை கூறி வாங்காமல் தாமதிப்பதாகவும், மூட்டைக்கு பணம் பெறுவதாகவும் கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விவசாயிகள் மதுக்கூர்-மன்னார்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஸ்வரன் இனிமேல் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியலை விவசாயிகள் விலக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் அதே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தொடர்ந்து பழையபடியே முறைகேடுகள் நடப்பதாகக் கூறி பெண்கள்
உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மன்னார்குடி-மதுக்கூர்
சாலையில் கம்பிகள், டயர்கள், முள் கம்பிகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து உயர் அதிகாரிகள், போலீசார் வந்து பேச்சு
வார்த்தை நடத்தியதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.