உள்ளூர் செய்திகள்
புதர் தீ மலர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் புதர் தீ மலர்கள்

Published On 2022-02-27 08:18 GMT   |   Update On 2022-02-27 08:18 GMT
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் புதர் தீ மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குளிர் காலங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிக அளவிலான பனிப் பொழிவினால் புதர்கள் மற்றும் புல்வெளிகள், செடிகொடிகள் கருகி வரும்.

இதனைத் தொடர்ந்து கோடை காலம் துவங்கும் போது கருகிய புதர்களில் மீது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருகிய செடி கொடிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் ஏற்படும்.

மேலும் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் காட்டுத்தீ மார்ச் மாதம் முதல் பற்றி எரிந்து வருவதும் வழக்கமான ஒன்றாகும்.

தற்போது பனிக்காலம் முடிந்து கோடை காலம் துவங்கும் இந்த நேரங்களில் காட்டுத்தீ ஏற்படுவதை உணர்த்தும் விதமாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

தீயின் நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலர்கள் புதர் தீ (காட்டு தீ) மலர்கள் என்று அழைக்கப்படுவதாக தோட்டக்கலை துறையினர் தெரிவிக்கின்றனர்.

மலைப் பகுதிகளில் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

மேலும் இந்தப்பூக்கள் பூக்க துவங்கியுள்ளதால் வனப்பகுதிகளில் தீ பிடிக்காமல் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News