உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.55¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.55 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் சிறப்பு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 3 பேர் குழுவாக இலங்கை செல்ல வந்திருந்தனர். 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்த கைப்பைகளில் ரகசிய அறை வைத்து தைத்து, அதன் உள்ளே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலரை மறைத்து கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.55 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.