உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே கொளுந்தியாருக்கு சரமாரி அடி-உதை : வாலிபர் மீது வழக்கு
களியக்காவிளை அருகே கொளுந்தியாரை சரமாரியாக அடித்து உதைத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
களியக்காவிளையை அடுத்த பளுகல், இளம்சிறை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். இவரது மகன்கள் ஜான் பென்டிங், ஜான் ஜெஸ்டின்.
அகஸ்டினுக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இதில் வெட்டப்படும் ஓலையை பங்கு வைப்பதில் அண்ணன்-தம்பி இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அகஸ்டின், தென்னந்தோப்புக்கு சென்று ஓலை வெட்டினார். இதனை பங்கு வைப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது அகஸ்டினின் மூத்த மகன் ஜான் பென்டிங்,அவரது தம்பி ஜான் ஜெஸ்டினை தாக்கினார்.
ஜான் ஜெஸ்டினின் மனைவி ஷைலா குமாரி தடுக்க சென்றார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கொளுந்தியாளை ஜான் பென்டிங் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் இதுபற்றி பளுகல் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜான் பென்டிங் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.