உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் தலைமையாசிரியர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் கொள்ளை
திருப்பத்தூரில் தலைமையாசிரியர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் கச்சேரி தெருவில் வசிப்பவர் ஜானகிராமன் (வயது 84). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (78). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.
இவர்களது இளைய மகன் பார்த்திபனை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிக்கொண்டு ஓசூருக்கு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஜானகிராமனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தனது சொந்த ஊருக்குத் திரும்பிய ஜானகிராமன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் செயின் மற்றும் வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை திருடிசென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜானகிராமன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.