உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்ட வனத்துறை சட்டத்தில் திருத்தம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்ட வனத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜய் வசந்த் எம்.பி.மனு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் மு. க ஸ்டாலினை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் நிலத்தில் ரப்பர் விவசாயம் நடந்து வருகிறது. இதில் பட்டா நிலத்தில் வளரும் ரப்பர் மரங்களும் தனியார் காடுகளாக கருதப்படுகிறது. ரப்பர் மரங்களைப் பொறுத்த வரையில் சுமார் 25 ஆண்டுகள் ஆன பின்பு பால் வடிவது நின்று விடும். அதற்குப் பின் அந்த மரங்களை வெட்டி புதிய மரங்களை நட்டு விவசாயம் செய்ய வேண்டும்.
ஆனால் தனியார் ரப்பர் தோட்டங்கள் காடுகளாகக் கருதப்படுவதால் வனத்துறை சட்டங்கள் இந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிப்பதில்லை . மத்திய அரசிடம் இதற்கான அனுமதி கோரிய போது மத்திய அரசு தமிழக அரசுக்குச் சட்ட திருத்தம் செய்யப் பரிந்துரை செய்தது.
ஆகவே குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் நலத்தைக் கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் முதிர்ச்சி அடைந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கு வகை செய்யும் விதமாக 1949-ஆம் ஆண்டின் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தைத் திருத்த கேட்டுக்கொள்கிறேன் .
2003 ஆம் ஆண்டு கேரளா சட்டசபை இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வந்ததை போன்று நமது விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.