உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளத்தில் தரமற்ற சாலை அமைப்பதாக பா.ஜனதா புகார்-போராட்டம் வாபஸ்
சாத்தான்குளத்தில் தரமற்ற சாலை அமைப்பதாக கூறி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட இருந்தனர். இந்நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் சேதம் அடைந்த சாலைகளை புதுப்பித்து அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பெருமாள்சுவாமி கோவில் தெருவில் இருந்து தட்டார்மடம் ரஸ்தா தெரு வரை நேற்று முன்தினம் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமாக அமைக்கப் படவில்லையென கூறி பா.ஜனதாவினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
மேலும் தரமற்ற நிலையில் சாலை அமைக்கப்படுவதை கண்டித்தும், ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனையறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, பா.ஜனதாவினரை அழைத்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மாவட்ட பா.ஜனதா தலைவர் பால்ராஜ், பொதுச்செயலர் செல்வராஜ், சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.
அப்போது சாலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். அதனை ஏற்று பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.