உள்ளூர் செய்திகள்
நாமக்கல் அருகே அடகு வைத்த நகையை திருப்ப முடியாததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் பெருமாபட்டியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அங்கம்மாள் (வயது 39). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அங்கம்மாள் தனது 15 பவுன் நகையை ரெட்டிப்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து இருந்தார். இந்த நகையை திருப்ப, தன்னிடம் வட்டிக்கு கடன் வாங்கியவர்களிடம் பணத்தை கேட்டு வந்தார். ஆனால் கடன் வாங்கியவர்கள் பணத்தை கேட்கும் போதெல்லாம் இன்று, நாளை என காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் நகையை திருப்ப முடியாமல் மூழ்கி விடுமோ என்கிற ஏக்கத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அங்கம்மாள் விஷத்தை குடித்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கம்மாள் இறந்து விட்டார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.