உள்ளூர் செய்திகள்
நகை கொள்ளை

ஆசிரியையிடம் 15 பவுன் நகை பறிப்பு- மொபட்டில் சென்றபோது கைவரிசை

Published On 2022-04-07 12:12 IST   |   Update On 2022-04-07 12:12:00 IST
மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே அனந்தன்நாடார்குடி பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஜெர்லின் ஜோஸ்பின் (வயது 33). இவர் சாந்தபுரம் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை ஜெர்லின் ஜோஸ்பின் அவரது தாயார் அற்புத பாய் (59) என்பவருடன் மொபட்டில் நாகர்கோவிலுக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தனர். பொருட்களை வாங்கி விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

பாம்பன்விளை - அனந்தன்நாடார் குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஜெர்லின் ஜோஸ்பின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்தார். அப்போது ஜெர்லின் ஜோஸ்பின் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதில் தாயார் அற்புதபாயும் காயமடைந்தார்.

இதற்கிடையில் மர்ம நபர் 15 பவுன் நகையுடன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளையன் சிக்கவில்லை.

இதற்கிடையில் படுகாயம் அடைந்த ஜெர்லின் ஜோஸ்பினை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் டாக்டர் வீட்டில் 97 பவுன் நகை ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டிருந்தது.

மேலும் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் மாவட்டம் முழுவதும் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தொடர்ந்து நடந்துவரும் இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே கொள்ளையர்களை பிடிக்க இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

Similar News