உள்ளூர் செய்திகள்
வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

தஞ்சையில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

Published On 2022-04-07 14:03 IST   |   Update On 2022-04-07 14:03:00 IST
தஞ்சையில் தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன.

இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் 3 மடங்கு உயர்த்தி உள்ளது.இதனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இன்று காலை மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜூன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் வீரமுத்து முன்னிலை வகித்தார். மாநில துணைச்செயலாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது. பின்னர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றனர்.

Similar News