உள்ளூர் செய்திகள்
தென்னை தொழிலை ஊக்கப்படுத்த கோரிக்கை
தென்னை தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை. தாமரைக்குளம், மண்டபம், ஏர்வாடி, காஞ்சிரங்குடி, உச்சிப்புளி மாயாகுளம், ரகுநாதபுரம், பெருங்குளம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
நூற்றுக்கணக்கானோர் இந்த பகுதியில் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் லட்சக்கணக்கான தேங்காய்கள் இங்கிருந்து வெளியூர்களுக்கு ஏற்றுமதியாகிறது. தேங்காய் விற்பனை சந்தையில் ராம நாதபுரம் மாவட்டம் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இங்குள்ள தேங்காய் ருசி மிகுந்ததாக இருக்கும். தென்னை கழிவு என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பொருள் தற்போது சர்வதேச சந்தையில் மதிப்புமிக்கதாக ஆகியுள்ளது. சந்தை பகுதிகளில் கீழக்கரை காய் என்ற சிறப்பு அம்சம் உண்டு.
அதன்பின்தான் பொள்ளாச்சி காய், கோட்டாறு காய் என வியாபாரிகள் மத்தியில் இன்றும் பேச்சு வழக்கில் பேசப்பட்டு வருகிறது. தேங்காய்களை உரித்தபிறகு, அவற்றிலிருந்து கிடைக்கும் மட்டைகளை மிஷினில் அரைத்தால் கயிறுதயாரிக்க பயன்படக்கூடிய நார் கிடைக்கும். நரம்புபோல் நீளமாக இருக்கும் நாரை திரித்தே கயிறு உற்பத்தி செய்யப்படும்.
மட்டைகளை அரைக்கும் போது சிறிய அளவிலான தூள்களாகவும் வெளியே வரும். இந்த தூள்களை ஒரு காலத்தில் வேண்டாத பொருளாக குப்பையில் கொட்டுவார்கள்.
தற்போது இந்த தூளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. தூள் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். அதை அப்படியே கேக் வடிவில் கெட்டியாக தயார் செய்து ஏற்றுமதி செய்யலாம்.
இதுபோன்ற கட்டிகளை வெளிநாடுகளில் வாங்கி அவற்றை தூளாக்கி கோழிப் பண்ணைகளில் தரைப் பகுதியில் பெட் போன்று அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். இது தண் ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.5 கிலோ, 65 கிராம், 30 கிராம், 10 கிராம் போன்ற எடைகளில் கட்டிகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப் படுகிறது. 5 கிலோ கேக் 80 லிட்டர் தண்ணீரை சேமிக்கும் தன்மை கொண்டது.
வெளிநாடுகளில் கேக்கை வாங்கி மறுபடியும் தூளாக்கி மாடித்தோட்டம், புல்தரை அமைப்பது, காய்கறி சாகுபடி, மரக்கன்றுகள் வளர்ப்பது போன்ற எளிய முறையான விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மிகச்சிறிய அளவிலான கட்டியில் விதைகளை ஊன்றி மரக்கன்றுகள் வளர்த்து வருகின்றனர். இந்த தூள்கள் மூலம் சொட்டுநீர் முறையை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் தென்னை தொழிலை இந்தபகுதியில் ஊக்கப்படுத்தினால் தென்னை சார்ந்த எண்ணற்ற தொழில் உருவாகும்.
ஆகவே தென்னை தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.