உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்த சுய உதவிகுழு பெண்கள்

சங்கர்நகர் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் மனு

Published On 2022-05-30 15:50 IST   |   Update On 2022-05-30 15:50:00 IST
சங்கர்நகர் சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள கொண்ட பையன் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:-

எங்களது கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் உடனடியாக தீர்வு காணப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் ஒரு வாரத்தில் மீண்டும் பழைய நிலைமை ஏற்படுகிறது.எனவே சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில், சங்கர்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த ஒரு வருடமாக எங்கள் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர்.

அதில், எங்களது குழு தலைவி மூலமாக வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்று அதனை நாங்கள் எங்கள் குழு மூலம் வங்கி மேலாளர் அறிவுரையின்படி அந்த வங்கியில் ஏஜென்டாக செயல்பட்டு வந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டோம்.

தற்போது வேறு ஒரு வங்கியில் கடன் பெறுவதற்காக எங்கள் குழு மூலம் அந்த வங்கியை அணுகியபோது ஏற்கனவே அவர்களுக்கு வேறு ஒரு வங்கியில் பணம் பாக்கி இருப்பதாக கூறி தர மறுத்துவிட்டனர்.  

இதனை விசாரித்த பின்னரே ஏஜெண்டாக செயல்பட்ட அந்த பெண் பணத்தை முழுவதுமாக அபகரித்துக் கொண்டது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Tags:    

Similar News