உள்ளூர் செய்திகள்
லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின்நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கப்பட்டுள்ளது
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை பொறுத்து லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும். இங்கு தலா 42 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. கடந்த மார்ச் 19-ந்தேதி அணையில் இருந்து விவசாயத்திற்கு திறக்கப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 100 கனஅடிநீர் திறக்கப்பட்டது.
இதனால் மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று முதல் அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்கு 200 கனஅடியும், குடிநீருக்காக 100 கனஅடியும் என மொத்தம் 300 கனஅடி வெளியேற்றப்பட்டது.
இதனால் ஒரு ஜெனரேட்டரில் 27 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. நீர்திறப்பு அதிகரிக்கும் போது மின்உற்பத்தியும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.30 அடியாக உள்ளது. வரத்து 40 கனஅடி, திறப்பு 300 கனஅடி. இருப்பு 5235 மி.கனஅடியாக உள்ளது.