கடலூர் அருகே தனியார் கம்பெனியில் திருடிய 6 பேர் கைது 150 கிலோ இரும்பு பொருட்கள் பறிமுதல்
- பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
- கும்பலை மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாயில் இருந்த இரும்பு பொருட்களை நூற்றுக்கணக்கான நபர்கள் தொடர்ந்து திருடி சென்று வந்தனர். இன்று காலை ஒரு கும்பல் தனியார் கம்பெனி வளாகத்தில் இரும்பு பொருட்கள் திருடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டி மனோகரன் தலைமையில் ஊழியர்கள் சோதனை செய்து கொண்டு இருந்தபோது, ஒரு கும்பல் இரும்பு பொருட்கள் திருடி இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து ஆறு பேர் கொண்ட கும்பலை அவர்கள் மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 150 கிலோ இரும்பு பொருட்களும் ஒப்படைத்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளக்கரையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 38), குண்டியமல்லூரை சேர்ந்த சுபாஷ் (வயது 42), தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சுகன்ராஜ் (வயது 26), தியாகவல்லியை சேர்ந்த சத்தியசீலன் (வயது 45), ஆலப்பாக்கத்தை செல்லப்பன் (வயது 40), தியாகவல்லியை சேர்ந்த இளையபெருமாள் (வயது 49) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 6 பேர் கைது செய்தனர்.