உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
- லட்சுமிபுரத்தில் தனியார் நாப்கின் மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றியது.
- ரூ.3.68 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் தனியார் நாப்கின் மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் முடியவில்லை. மேலும் மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் 18 எந்திரங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.