உள்ளூர் செய்திகள்

பெண் வயிற்றில் உபகரணம் வைத்து தைத்த விவகாரம்- தனியார் மருத்துவமனைக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு

Published On 2024-08-08 17:53 IST   |   Update On 2024-08-08 17:53:00 IST
  • சிகிச்சையின் போது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை வயிற்றில் வைத்து தைத்துள்ளனர்.
  • இதற்கு நஷ்ட ஈடு கேட்டு பிரபாவதி வழங்கு தொடர்ந்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பிரபாவதி, தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

கடந்த 2010 செப்டம்பர் 14-ந் தேதி வலி அதிகரித்ததால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து, மாத்திரை சாப்பிட்டார். வலி குறையாததால் புதுச்சேரி அரசு மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு, குடல்வால் பிரச்சினை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அறுவை சிகிச்சைக்காக வயிற்றுப் பகுதியை கிழித்த போது, அடிவயிற்றில் கிளிப் போன்ற மருத்துவ உபகரணம் (ஆர்ட்ரி பர்செப்ஸ்) ஒன்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரபாவதி மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயிற்றில் இருந்த மருத்துவ உபகரணம் மற்றும் குடல் வால்வு அகற்றப்பட்டது. இதுகுறித்து பிரபாவதி, மருத்துவர்கள் கவனக் குறைவு காரணமாக தனக்கு ஏற்பட்ட பாதிப்பு, சேவை குறைபாட்டிற்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய தலைவர் முத்து வேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், பிரபாவதிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த போது கவனக்குறைவாக மருத்துவ உபகரணத்தை நோயாளியின் அடிவயிற்றில் வைத்து தைத்ததால், பல்வேறு தொல்லைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகி உள்ளார்.

எனவே பிரபாவதிக்கு ரூ. 7 லட்சம் நஷ்டஈடு, வழக்குத் தொகையாக ரூ. 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 7 லட்சத்து 20 ஆயிரம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், தீர்ப்பின் நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் வழங்கிட உத்தர விடப்பட்டது. தவறும் பட்சத்தில் 9 சதவீதம் ஆண்டு வட்டி மேற்படித்தொகை செலுத்தும் வரை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News