மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் சிக்கிய தருமபுரி மருத்துவகல்லூரி உதவி பேராசிரியரை இடமாற்றம் செய்து உத்தரவு
- சதீஷ்குமார் மீது மருத்துவக்கல்லூரி 2-ம் ஆண்டை சேர்ந்த மாணவ ,மாணவிகள் கடந்த மாதம் 23-ந்தேதியே புகார் செய்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- கண்துடைப்பு நடவடிக்கை என மருத்துவ துறையினர் அதிருப்தி
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணி புரிந்துவரும் சதீஷ்குமார் என்பவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் புகாருக்குள்ளான சதீஷ்குமாரை சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவிலிருந்து, குழந்தைகள் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
மேலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாகவும் டீன் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமார் மீது புகார்கள் வருவது புதிதல்ல என்று கூறும் மருத்துவமனை வட்டாரங்களை சேர்ந்த சிலர் சதீஷ்குமார் நடத்தி வந்த கிளினிக்கிலும் இதேபோன்ற ஒரு புகார் எழுந்து பின்னர் அது சமாளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சதீஷ்குமார் மீது மருத்துவக்கல்லூரி 2-ம் ஆண்டை சேர்ந்த மாணவ ,மாணவிகள் கடந்த மாதம் 23-ந்தேதியே புகார் செய்துள்ளனர். ஆனால் அது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த புகார் பற்றி அரசல் புரசலாக வெளியே தகவல் கசிந்த பிறகே விசாரணை குழு அமைக்கப்படுவதாக கடந்த 2-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த விசாரணை வெறும் கண்துடைப்புதான்.தொடர்ந்து புகார்களில் சிக்கிவரும் ஒருவரின் பணியிடத்தை மாற்றிவிட்டால் மட்டும் அது தகுந்த நடவடிக்கையாகிவிடுமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.