உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் - மாநில தலைவர் பேட்டி

Published On 2023-09-30 10:23 IST   |   Update On 2023-09-30 10:23:00 IST
  • கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நடந்தது.
  • கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்க மணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேல்நிலை கல்வி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், பள்ளிகளில் மாணவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.

மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை தோற்றுவித்து பணி நியமனம் செய்ய வேண்டும். இதே போல கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அதன்பின் மாநில தலைவர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் கட்ட போராட்டங்கள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

வரும் 9ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவனஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும், இதை அடுத்து சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News