மயிலாடுதுறையில் அமாவாசை தீர்த்தவாரி
- சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.
இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர்.
ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.
அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாட ல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மயூரநாதர் ஆலயத்திலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மயூரநாதர் சுவாமி, வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம் இவற்றிலிருந்து இறைவன் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.
பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் நிறுவாகிகள், தருமபுரம் ஆதீனம் நிறுவாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.