- அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது
- கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில்,பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிவாய்ப்பினை பெற்றுள்ளனர்.மேலும் காணொளி காட்சி வாயிலாகவும் வேலைவாய்ப்பு பயிற்சிதுறையால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதேபோன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் இணையதளம், கல்வி தொலைக்காட்சி, யுடியூப் சேனல் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு பாடக்குறிப்புகள், முந்தைய தேர்வுகளின் வினாத்தாள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களும் இதுபோன்ற பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்தி தேர்வில் வெற்றிப் பெற்று அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) கலைசெல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் மு.செல்வம், கல்லூரி முதல்வர் (பொ) ஜோ.டொமினிக் அமல்ராஜ், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.